பணவீக்கம், வட்டி உயர்வு குறித்த அச்சங்களுக்கு மத்தியிலும் இந்தியப் பங்குச்சந்தைகள் இந்த வாரம் வலுவாக மீண்டன. ரூபாயின் மதிப்பு உயர்வு, கச்சா எண்ணெய் விலை சரிவு, நிறுவனங்களின் சாதகமான வருவாய் அறிவிப்புகள் ஆகியவை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டதாக ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் வினோத் நாயர் தெரிவித்துள்ளார்.
வாரத்தின் தொடக்கத்தில் பணவீக்கக் கவலைகள் சந்தையை அழுத்தின. நுகர்வோர் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் சகிப்புத்தன்மை வரம்பின் உச்சத்தை நெருங்கியதும், மொத்த விலைப் பணவீக்கம் எதிர்பார்ப்பைவிட அதிகரித்ததும் எச்சரிக்கையை ஏற்படுத்தின. இதனால், முக்கிய அரசுப் பத்திரத்தின் வருவாய் விகிதம் பல ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியது. உபரி பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த, வங்கிகள் தினசரி பராமரிக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதத் தேவையை ரிசர்வ் வங்கி உயர்த்தியதும் முதலீட்டாளர்களின் கவலையை அதிகரித்தது.எனினும், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கான சிறப்பு டாலர் வசதியும், அந்நியச் செலாவணி இடர் பாதுகாப்பு விதிகளின் கடுமையாக்கமும் ரூபாய் மீட்சிக்கு உதவின. நீண்டகால மூலதன ஆதாய வரி மற்றும் பங்குப் பரிவர்த்தனை வரி மறுஆய்வு செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் சந்தைக்கு ஊக்கமளித்தது. கச்சா எண்ணெய் விலையும் பத்திர வருவாய் விகிதங்களும் தணிந்ததால், முதலீட்டாளர்கள் ஆரம்பகட்டத் தடைகளைத் தாண்டி, வலுவான இரண்டாம் காலாண்டு வணிகத் தகவல்களை வெளியிட்ட நிறுவனப் பங்குகளில் கவனம் செலுத்தினர்.
இருப்பினும், ஏற்றம் பெரும்பாலும் பெரிய நிறுவனப் பங்குகளிலேயே குவிந்தது. நடுத்தர நிறுவனப் பங்குகள் மிதமான முன்னேற்றம் கண்டன. சிறிய நிறுவனப் பங்குகள் சற்றுச் சரிந்தன. வலுவான நிதிநிலை முடிவுகளும் நிர்வாகங்களின் நம்பிக்கையான கருத்துகளும் தகவல் தொழில்நுட்பத் துறையை முன்னிலைப்படுத்தின. உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகளில் ஏற்பட்ட விற்பனை அழுத்தத்தைத் தொடர்ந்து, உள்நாட்டுப் பெரிய நிறுவனப் பங்குகளுக்கு முதலீடுகள் திரும்பியதும் ஆதரவளித்தது.
மாறாக, சுகாதாரம், மருந்துத் துறைகள் பின்தங்கின. உயர்ந்த உள்ளீட்டுச் செலவுகள் லாப விகிதத்தைப் பாதிக்கலாம் என்ற கவலையால் நுகர்பொருள் துறையும் அழுத்தத்தைச் சந்தித்தது.
அடுத்தகட்ட மீட்சி நீடிக்க, ஐடி துறையைத் தாண்டியும் நிறுவன வருவாய் வளர்ச்சி பரவ வேண்டும் என நாயர் குறிப்பிட்டார். நிதி, நுகர்வு மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் வருவாய், லாப விகிதச் செயல்பாடுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். இந்தியாவின் அக்டோபர் பிஎம்ஐ, அமெரிக்க வேலைவாய்ப்பின்மை உதவிக்கான விண்ணப்பங்கள், ஜப்பானின் பணவீக்கத் தரவுகள் அடுத்தகட்ட எதிர்பார்ப்புகளை வழிநடத்தும். பணவீக்கம் உயர்ந்திருப்பதால், சந்தை தேர்ந்தெடுக்கப்பட்ட, வருவாய் வலிமையுள்ள பங்குகளைச் சார்ந்தே நகரக்கூடும்.